93. அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் கோயில்
இறைவன் மகாலிங்கேஸ்வரர், மருதப்பர்
இறைவி பெருநலமாமுலையம்மை
தீர்த்தம் காருண்யாமிர்த தீர்த்தம்
தல விருட்சம் மருத மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருவிடைமருதூர், தமிழ்நாடு
வழிகாட்டி கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் கும்பகோணத்திற்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Tiruvidaimarudur Gopuramமருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு வடக்கே மல்லிகார்ஜுனத்திற்கும் (ஸ்ரீசைலம்), தெற்கே புடார்ஜுனத்திற்கும் (திருபுடைமருதூர்) இடையில் அமைந்திருப்பதால் மத்தியார்ஜுனம் (இடை மருது) என்ற பெயர் பெற்றது.

மூலவர் 'மகாலிங்க சுவாமி', பெயருக்கேற்றவாறு மிகப் பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். இவருக்கு 'மருதப்பர்' என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் 'பிரகத் சுந்தர குஜாம்பிகை' என்றும், 'பெருநலமா முலையம்மை' என்றும் வணங்கப்படுகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜப் பெருமான், சமயக் குரவர்கள் நால்வர், மகாலட்சுமி, பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

Thiruvidaimarudur Amman Thiruvidaimarudur Moolavarஇத்தலத்து மூலவரை மையமாகக் கொண்டு பரிவார சன்னதிகளாக திருவலஞ்சுழி விநாயகர் சன்னதியாகவும், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவாவடுதுறை நந்தி தேவர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்கள் சன்னதியாகவும், சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.

வரகுண பாண்டிய மன்னன் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியருளிய தலம். மூலவர் சன்னதிக்குச் செல்லும் கோபுர வாசலில் இன்றும் பிரம்மஹத்தி உள்ளது. அதனால் வரகுண பாண்டியன் சென்றது போல் அந்த வாசல் வழியாக செல்பவர்கள் திரும்பவும் அதே வழியாக வராமல் அடுத்து உள்ள அம்பாள் சன்னதி வாசல் வழியாக வெளியே வருவார்கள். இந்த சன்னதிக்கு செல்லும் வாயிலுக்கு முன்புறம் மிகப் பெரிய நந்திதேவர் உள்ளார்.

பட்டினத்தார் இக்கோயிலில் கிழக்கு கோபுரம் அருகிலும், பத்திரகிரியார் மேற்கு கோபுரம் அருகிலும் தங்கியிருந்தனர் என்பதை நினைவுகூறும் வகையில் இவர்களின் திருவுருவங்கள் அங்கு உள்ளன. பத்திரகிரியாரும், அவரது சீடரும் முக்தி அடைந்த தலம். பட்டினத்தார் சென்னை நகருக்கு அருகில் உள்ள திருவொற்றியூர் தலத்தில் முக்தி அடைந்தார்.

Thiruvidaimarudur Moogambigai Ammanஇக்கோயிலில் மூகாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. அம்பாள் மௌனமாக தவம் செய்வதாக ஐதீகம். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் என்னும் தலத்தில் உள்ள மூகாம்பிகை அம்மனுக்கு அடுத்து இங்குதான் மூகாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது.

கோயில் பிரகாரத்தில் சூரியனும், சந்திரனும் எதிரெதிர் திசையில் இருக்கின்றனர். அவர்கள் எதிரே ஒன்பது குழிகள் உள்ளன. அவையே நவக்கிரங்களாக வழிபடப்படுகின்றன.

கோயிலின் முதல் மதிலின் பிரகாரத்தை வலம் வருவது 'அஸ்வமேதப் பிரதட்சிணம்' என்று வழங்கப்படுகிறது. ஏழு, பன்னிரெண்டு, இருபத்தி நான்கு, நூற்றி எட்டு என்ற அளவில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என்ற நாட்கணக்கில் செய்துக் கொண்டு வலம் வருதல் வேண்டும். அதேபோல் இதற்கு அடுத்தப் பிரகாரம் 'கயிலைப் பிரகாரம்' என்று அழைக்கப்படுகிறது. இதை வலம் வந்தால் கயிலை மலையை வலம் வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாணிக்கவாசகருக்கு பெருமான் திருவடி தீட்சை தந்தருளிய தலம். பிரம்மா, இந்திரன், இந்திராணி, குபேரன், அக்னி, சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஆறு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஐந்து பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com